

புதுச்சேரி: “அனைவரும் இந்திய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு செயல்படவேண்டும்” என்று வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மகளிர் தினவிழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் 'பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும்' என்பதற்காக சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆளுநர் மாளிகை முன்பு இந்த நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்று சைக்கிளில் பல்வேறு பகுதிகளில் வலம் வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: ''புதுச்சேரியில் அதிகளவில் காய்ச்சல், உடல்வலி, சுவாசக்கோளாறு அறிகுறிகளோடு இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் அதிகம் பேர் புறநோயாளிகளாக வருகின்றனர். ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அச்சம்கொள்ள தேவையில்லை. அதிகம் மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். வைரஸ் நோய் காற்றில் தான் பரவுகின்றது. ஆகவே பொதுக் இடங்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் முககவசம் அணிவது நல்லது'' என்று குறிப்பிட்டார்.
வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கேட்டதற்கு, "வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி இதில் நாம் இந்தியாவில் உள்ள எல்லோரையும் சகோதரத்துவத்தோடுதான் பார்க்க வேண்டும். நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிற மாநிலத்தில் பணியாற்றுகின்றார்கள். சகோதரத்துவத்தோடு மொழி மாநில எல்லைகள் கடந்து அன்போடு பழகும்போதுதான் இந்த வேறுபாடுகள் வராது. நமக்கு அது வதந்தியா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அச்சத்தோடு அவர்கள், தமிழகத்தையும் சரி, பிற மாநிலத்தையும் விட்டு போகின்றார்கள் என்று சொல்வது சரியானதாக இருக்காது. அதனால், என்ன கொள்கை வேற்றுமைகள் இருந்தாலும், மொழி வேற்றுமைகள் இருந்தாலும் அனைவரும் இந்திய தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு செயல்படவேண்டும்" என்றார்.
பட்ஜெட் தொடர்பாக கேட்டதற்கு, "புதுச்சேரியை பொறுத்துவரை மகளிர்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காகத்தான் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிக்கப்பட்டது, தமிழகத்தில் கூட அறிவித்தார்கள். ஆனால் அங்கு கொடுக்கவில்லை ஆனால், புதுச்சேரியில் வழங்கப்பட்டு வருகின்றது. மத்தியப் பிரதேசத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பெண்களுக்கான பல திட்டங்கள், கர்ப்பிணிகளுக்கான பல நலத்திட்டங்கள் வரவுள்ளது" என்று குறிப்பிட்டார். ஆளுநர் மீதான வழக்கு தொடர்பாக கேட்டதற்கு, "இது வழக்கமானது இல்லை. வழக்கு எப்படி வழக்கமாகின்றது என்று பார்க்கலாம்" என்று பதிலளித்தார்.