

சென்னை: வட மாநிலத் தொழிலாளர் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதுதாக்குதல் நடத்தப்படுவதுபோன்றும், பிஹார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. தமிழகத்திலும் இந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், தேவையின்றி அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தள்ளனர்.
மேலும், வதந்தி பரப்புவோர் கைது செய்யப்படுவதுடன், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பல்வேறு குற்றச்சாட்டு களை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில், வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதால், அண்ணாமலை மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக காவல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அதேபோல, வதந்தி பரப்பியதாக பிஹார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கை முடக்குமாறு, தமிழகபோலீஸார் ட்விட்டர் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 மணி நேரம் அவகாசம்: இது தொடர்பாக தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வடமாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காகஎன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொலியாகவும் வெளியிடுகிறேன். திமுகவுக்குதிராணி இருந்தால், என்னை கைது செய்யவும்.
பொய் வழக்குகள் மூலம் ஜனநாயகக் குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன். 24 மணி நேரம் அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள். அணி திரள்வோம். அநியாயத்துக்கு எதிராக வென்று காட்டுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.