

சென்னை: தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் நேற்று இணைந்தார்.
பாஜக செயல்பாடுகளை சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம்கொண்டு சென்றதுடன், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதில் கொடுத்து வந்தார் சிடிஆர்.நிர்மல்குமார். மேலும், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிடுவார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல சங்கடங்களைக் கடந்து பயணித்தேன். உண்மையாக, நேர்மையாக உழைத்தும், வேதனை மட்டுமேமீதமானது. எனவே, விடைபெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பலமுறை சிந்தித்து, தற்போது பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை, தொண்டர்களையும், கட்சியையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், கட்சியைப் பற்றி சிந்திக்கவில்லை. தொண்டர்களை மதிக்காமல் செயல்படும் நபரால், கட்சி அழிவை நோக்கிச் செல்கிறது.
2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றிக் கவலை இல்லாமல், மாய உலகில் சுற்றி வரும் நபரால், கள யதார்த்தத்தை உணர முடியாது. இதை உணர்த்த முயன்ற பலர் தோல்வியுற்றோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‘‘அன்புசகோதரர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களது பணி சிறக்கட்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக, அதிமுகவிடையே கூட்டணி உள்ள நிலையில், பாஜகவில் இருந்து விலகி, சிடிஆர்.நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.