Published : 06 Mar 2023 07:32 AM
Last Updated : 06 Mar 2023 07:32 AM

வடமாநில தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் வதந்திபரப்பப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், தொழி லாளர்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புஇல்லை, விரட்டி அடிக்கப்படு கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறந்த பண்புகளைக் கொண்ட தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில், சொந்த மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நாடு தழுவிய அளவில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் திமுக ஆட்சிக்கும், பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிஹார் முதல்வர் நிதீஸ் குமார் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கத்துடன், வடமாநிலத் தொழிலாளர் தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்றுதமிழக முதல்வர் அறிவித்திருப் பதை வரவேற்கிறோம். தமிழக மக்கள் ஒன்றுபட்டு, சமூகவிரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தியைப் பரப்பியவர்கள் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால், பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை யும், அவர்களது உரிமைகளையும் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சிகளாகும். இதில் தொடர்புடையவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அச்சமடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், அவர்களை தமிழக அரசு பாதுகாக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில், ‘‘தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமடையவேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள். தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x