

கடலூர்: கடலூர் - புதுச்சேரி சாலையில் பெரிய காட்டுப்பாளையம் அருகே மதலப்பட்டு ஊராட்சி சிவனார்புரத்தில் சேகர் மனைவி கோசலை என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது.
இத்தொழிற்சாலைக்கு உள்ளேயே பட்டாசு குடோனும் உள்ளது. இந்நிலையில் மாசிமக திருவிழாவுக்காக பல்வேறு கோயில்களில் இருந்து பட்டாசு ஆர்டர் வந்துள்ளது.
இதையடுத்து புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன் மனைவி மேகலா (34), ஓடைவெளியைச் சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி (41), ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி பிருந்தா (35), சங்கர் மகன் சக்தி (25), சேகர் மனைவி கோசலை, அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்த பூபாலன் மனைவி மல்லிகா (55), விழுப்புரம் பாக்கம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகள் அம்பிகா (18), தவளக்குப்பம் காசான்திட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகள்கள் செவ்வந்தி (19), லட்சுமி (25) உள்ளிட்ட 10 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடோன் முழுவதும் பட்டாசு இருந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4.15 மணிக்கு திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதில் மல்லிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த பிருந்தா, அம்பிகா, லட்சுமி, செவ்வந்தி, சுமதி ஆகிய 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மேகலா, சக்தி, கோசலை ஆகிய 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஒருவரது நிலை என்னவானது என தெரியவில்லை.
கடலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீஸார் விசாரிக்கின்றனர். ஆட்சியர் பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.