

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில் 19.1 கி.மீ. தொலை உயர்நிலைப் பாதையாகவும், 26.7 கி.மீ. தொலை சுரங்கப் பாதையாகவும் அமையவுள்ளது. மொத்தம் 49 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சுரங்கப் பாதை பணிகள், மாதவரம், பசுமைவழிச்சாலையில் தற்போது தீவிரமடைந்துள்ளன.மற்ற இடங்களில் சுரங்கப் பாதை பணியை சில மாதங்களில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
இங்கு சில இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கப் பாதை பணி தொடங்க உள்ளதையொட்டி, பூமிக்கடியில் உள்ள கேபிள்கள், குழாய்களை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்தப்பகுதியில் வரும் மே மாதத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு சந்திப்புப் பகுதியில் கட்டுமானத்துக்காக, ஒரு தனியார் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இப்பகுதியில் வரும் மே மாதத்தில்சுரங்கப் பாதை பணி தொடங்கப்பட உள்ளது.
ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு மற்றும் நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இங்கு மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்து சேவை தொடங்கும்போது, இங்கிருந்து நேரடியாக பல்வேறு முக்கிய இடங்களுக்கு பயணிகள் செல்லமுடியும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்க வழித்தடப் பணிகளை 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.