Published : 06 Mar 2023 07:25 AM
Last Updated : 06 Mar 2023 07:25 AM

வரவேற்பில் ஆடம்பரத்தை தவிர்த்து இளைஞரணி அறக்கட்டளைக்கு நிதி தாருங்கள்: திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘பேனர்கள், செங்கோல் உள்ளிட்ட பரிசுகள் வேண்டாம்; ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்கள், மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்புகள், இளைஞரணி அறக்கட்டளைக்கு நிதியாக தாருங்கள்’ என கட்சியினருக்கு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞரணி செயலாளராக திமுக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தமிழகம் முழுவதும் பயணிக்கும்போது, அளிக்கப்படும் வரவேற்பை கண்டு நெகிழ்கிறேன். என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.

அதே நேரம், என்னை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசுவெடிப்பது, வெள்ளிச் செங்கோல்,வாள் போன்றவற்றை பரிசாகவழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்ற நடைமுறைகள் தொடர்கிறது. இவற்றை தவிர்க்க பலமுறை கேட்டுக் கொண்ட பின்பும், தொடர்வது வருத்தமளிக்கிறது.

திமுக தலைவர் அறிவுரைப்படி, புத்தகங்கள் வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நீ்ங்கள் அளிக்கும் புத்தகங்களை தேவைப்படும் பள்ளி, கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம். திமுகதலைவரின் பிறந்த தினத்தை ஒட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் ‘கலைஞர் நூலக’த்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை.

மேலும், ‘ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும்வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள்’ என்று நான் கேட்டுக்கொண்டபடி நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல இல்லங்களுக்கு அளித்துள்ளேன்.

அதேபோல், பலரும் என்னிடம் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்குகின்றனர். அதில்பாரபட்சம் பார்க்காமல், என் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். அந்த நிதியிலிருந்து மருத்துவம், கல்வி போன்ற உதவிகளைத் தேவையுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.13.75 லட்சத்தை வழங்கியுள்ளோம். இப்பணியைத் தமிழகம் முழுவதும் தொடர உள்ளோம். எனவே நீங்கள் காட்டும்அன்பை, இளைஞரணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குங்கள்.

வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவர்களின் கல்வி காக்க உதவலாம். நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு புத்தகம் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைக்கு உதவும். மகளிர்சுயஉதவிக் குழுத் தயாரிப்புகள் தயாரிப்பவர்-பயன்படுத்துவோர் என இருதரப்புக்கும் பயனளிக்கும்.

எனவே, திமுக தொண்டர்கள் பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்கள், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும்,மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளை மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x