

சென்னை: வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில், அரசியல் நோக்குடன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கை: அமைதிப் பூங்கா என்று பெயர்பெற்ற தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் தினமும் வதந்திகளைப் பரப்பி, தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்றலாம் என்று நினைக்கின்றனர். முதல்வரின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், அகில இந்திய தலைவர்கள், ‘இந்தியாவுக்கு திமுக தலைவர்தான் வழிகாட்ட வேண்டும். இந்தியாவை வழிநடத்தும் தகுதி திமுக தலைவருக்கு இருக்கிறது’’ என்று பாராட்டினர்.
இதனால், முதல்வரின் நிர்வாகத்துக்கு களங்கம் கற்பிக்கவே, தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வந்த போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
திமுக இந்திக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதன் விளைவால்தான், இதுபோன்று அச்சம் உருவாகிவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். திமுக எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல.
இந்திதிணிப்புக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு, இந்தி பேசும் மக்கள்மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயம் மீது வன்முறை, சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வுப் பிரச்சாரம் என நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பவர்கள் பாஜகவினர்தான்.
தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய, உத்தர பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிஹார் மாநில பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், பதற்றத்தை பரப்பி வருகின்றனர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வகுப்புவாதம், மதவெறி, மொழிவெறி, கலவரம் மூலம் அரசியல் செய்யும் பாஜகவினர், வதந்தி பரப்பி, தமிகத்தின் அமைதியைக் கெடுக்கலாம் எனக் கருதுகின்றனர்.
ஆனால், பிஹார் அரசு சார்பில் வந்த குழுவினர், தமிழகத்தில் எந்த அச்ச சூழலும் இல்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை உறுதி செய்து, உண்மை நிலையைஅறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
வதந்தி பரப்பும் உத்தர பிரதேச, பிஹார் பாஜக நிர்வாகிகளை கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, முதல்வரை நோக்கி அறிக்கை விடுவது அரசியல் உள்நோக்கமின்றி, வேறு இல்லை. வடமாநிலத் தொழிலாளர் நலன் காப்பதில் தமிழக அரசுக்கு துணைநிற்போம் என்ற அண்ணாமலை, வன்மமாக அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இனியும் தொடர்ந்து வதந்தி பரப்பினால், சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும்.