Published : 06 Mar 2023 06:56 AM
Last Updated : 06 Mar 2023 06:56 AM
சென்னை: தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் கோவை மண்டல ஐஜி ஆகியோருக்கு இந்திய கட்டுநர் சங்க மாநில தலைவர் க.ஜெகநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளதால், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒருவித பயத்துடன் உள்ளனர். நமது அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டும் விதமாக உள்ளன. அதற்காக முதலில் அரசுநிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும் வடமாநில தொழிலாளர்களை சில சமூக விரோத அமைப்புகள் மிரட்டும் விதமாக வதந்திகளைப் பரப்புவதால், எங்கள் தொழிலாளர்கள் வேலை தளத்துக்கு வர மறுத்து, சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் கட்டுமான தொழில் பெருமளவு பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
குறிப்பாக திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், பரவலாக தமிழகம் எங்கும் பாதிப்புகள் உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, அசம்பாவிதம் ஏற்படாது என்ற நம்பிக்கையை ஊட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT