Published : 06 Sep 2017 07:36 PM
Last Updated : 06 Sep 2017 07:36 PM

சங்கடத்தில் சிக்கித் தவிக்கிறேன்: தனியரசு

அதிமுக ஆதரவு அணி எம்.எல்.ஏக்களில் ஒருவரான தனியரசு அதிமுக பிளவுபட்டு நிற்பதை பார்க்கும்போது யார் பக்கம் நிற்பது என்ற சங்கடத்தில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்கள் பக்கம் உள்ளது என்று பேட்டி அளித்தார். இது பற்றி தமிமுன் அன்சாரியிடம் கேட்ட போது அவர் ஆதரவு இல்லை என்ற தொனியில் பதிலளிதார்.

இன்னொரு எம்.எல்.ஏவான தனியரசுவிடம் இதே கேள்வியை வைத்தபோது அவர் தான் எந்தப் பக்கம் என்பதை சொல்ல முடியாமல் சங்கடத்தில் தவிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து தனியரசு எம்.எல்.ஏ அளித்த பதில் வருமாறு:

அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆதரவு அணி மூன்று எம்.எல்.ஏக்களும் தங்கள் பக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளாரே?

ஏற்கெனவே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்த ஓபிஎஸ் அணியினர் இன்று இணைத்து துணை முதல்வராகவும், கட்சியை முடக்க வழக்கு போட்ட மா.ஃபா. பாண்டியராஜன் போன்றோர் அமைச்சராகவும் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று இந்த ஆட்சியை காப்பாற்ற எவ்வளவு பாடுபட்டோம்

உங்கள் வாதத்தை பார்த்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேசும் அதே தொனியில் உள்ளதே?

அப்படியில்லை, இதில் நான் எப்படி வேறுபடுகிறேன் பாருங்கள், நான் இதில் இருந்து விலகி இருந்து பார்க்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு காப்பாற்றிய ஆட்சியில் இவர்கள் இணைந்து பதவியை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள், தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி தவிர தற்போது தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏக்களையும் இணைத்து ஒரு நல்ல ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆதரிக்கிறேன்.

ஒரு வேளை அப்படி நடக்கவில்லை, பெரும்பான்மை நிரூபிக்கும் கட்டாயத்தில் எடப்பாடி வந்தால் யாரை ஆதரிப்பீர்கள்?

அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரிதான், எனக்கு அதில் உடன்பாடுதான். அரசை கவிழ்க்கும் எண்ணமிருந்தால் அதற்கு எதிரான செயல்பாட்டில் போயிருப்பேன். நீட் போன்ற விவகாரங்களில் அடிபணியாமல் சமரசமில்லாமல் போராடிக் கொண்டு, உட்கட்சியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து ஆட்சியைத் தொடருங்கள் என்கிற எண்ணத்தில் எடப்பாடி அரசை ஆதரிக்கிறேன்.

நாளை தினகரன் தரப்பில் ஆளுநரை சந்தித்து அதன் மூலம் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு வரும் நிலை வந்தால் இந்த ஆட்சி தொடரணுமா என்ற நிலை வரும்போது மக்களின் நலன், ஒன்றரை கோடி தொண்டர்கள் எண்ணம், நமது கட்சியின் நிர்வாகிகள் நிலை கேட்டு முடிவெடுக்கலாம் என்றிருக்கிறேன். அப்படி ஒரு நிலை வராது அனைவரும் இணைய வாய்ப்பு உண்டு என்ற அடிப்படையில் இந்த ஆட்சி இருக்கணும் என்பதற்காக ஆதரிக்கிறேன்.

உங்களுடன் இருக்கும் தமிமுன் அன்சாரி வாக்கெடுப்பில் தேவைப்பட்டால் எதிர்த்து வாக்களிப்பேன் என்கிறாரே?

அவர் பாஜகவுடன் அதிமுக செல்கிறது, நீட் போன்ற விவகாரத்தில் முரண்பாடு காரணமாக எதிர்க்கிறார். அதே போல கருணாஸும் நாளைக்கு தினகரன் அணியுடன் செல்வது போன்ற சூழ்நிலைதான் உள்ளது. ஆளுநரை சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

தினகரன் அணியுடன் செல்லட்டுமா என்று கேட்டார். அது உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டோம்.

அப்படியானால் கருணாஸ் டிடிவி தினகரனுடன் இணையும் முடிவுக்கு வந்துவிட்டாரா?

ஆமாம், நாளை ஆளுநரை சந்திக்கும் போது கருணாஸ் உடன் செல்வார் என்று நம்புகிறேன். ஆனால் நான் எப்படி என்றால் பலருடன் பழகியவன். எல்லோரும் இணைந்து இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

உங்கள் எண்ணம் இணைய வேண்டும் விரும்புகிறீர்கள், ஓருவேலை தினகரன் இல்லாத, எடப்பாடி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் என்ன செய்வீர்கள்?

இவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.யார் முதல்வராக வர வேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆட்சி தொடரணும் ஒற்றுமையாக இருக்கணும்.

சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு வந்தால் இந்த ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காக எடப்பாடியை ஆதரிப்பீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதை இப்படியும் கூறலாம். இந்த ஆட்சிக்கு நெருக்கடி வந்து என்னுடைய ஒரு வாக்கால் கவிழ்கிற நிலை வந்தால் நிச்சயமாக எடப்பாடியை ஆதரிப்பேன். எனக்கு இருவருமே பழக்கம். தற்போது பிரிந்துள்ள நிலையில் ஜெயலலிதா கொண்டு வந்த ஆட்சியை கவிழ்ப்பதா? தினகரனை ஆதரிப்பதா என்ற சங்கடம் எனக்குள் இருக்கிறது. இவ்வாறு தனியரசு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x