Published : 06 Mar 2023 07:54 AM
Last Updated : 06 Mar 2023 07:54 AM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் முக்கிய பகுதி களில் மின் விளக்குகள் இல்லை என, ‘இந்து தமிழ்’ நாளிதழ் உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
கோவில்பட்டியில் லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் வரை பிரதான சாலை, புதுரோடு சாலை ஆகியவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டன. பிரதான சாலையில் தினசரி சந்தை பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் நிழற்குடை கட்டி திறக்கப்பட்டது.
மக்கள் இந்த பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று தான் நகர பேருந்துகளில் பயணிக்கின்றனர். இப்பகுதி மிகவும் முக்கியமான பகுதி என்பதால் காலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் இருந்து புதுரோடு விலக்கு, புதுரோடு, கடலையூர் சாலையிலும் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
இதேபோல், எட்டயபுரம் சாலையில் உள்ள மின்கம்பங்களில் கேபிள் வயர்களை கட்டி வைத்துள்ளனர். பிரதான சாலையில் தினசரி சந்தை பேருந்து நிறுத்தம் அருகே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். பிரதான சாலை, புதுரோடு, கடலையூர் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். கடலையூர் சாலையில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கடலையூர் சாலையைச் சேர்ந்த வணிகர் ப.முருகன் கூறும்போது, “கடலையூர் சாலை கோவில்பட்டி புதுரோட்டில் அரசு மருத்துவமனை முன்பிருந்து பிரிகிறது. அங்கிருந்து கூசாலிபட்டி வரை சாலையோர மின்விளக்குகள் இல்லை. இரவு 9 மணிக்கு மேல் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மின் விளக்குகள் அமைத்து, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
சமூக சேகவர் பாலமுருகன் கூறும்போது, “பிரதான சாலையில் தினசரி சந்தை பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதுரோடு விலக்கு மற்றும் புதுரோடு பகுதியில் மின்விளக்கு கிடையாது. ரயில் நிலைய மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகு சாலையிலும் மின்விளக்கு கிடையாது. மின்விளக்கு அமைக்க வேண்டும். எட்டயபுரம் சாலையில் உள்ள உயர்அழுத்த மின்கம்பம் உள்ளிட்ட மின்கம்பங் களில் கேபிள் வயர்கள் கட்டப்பட்டுள்ளன. இது ஆபத்தை விளைவிக்கும். அவற்றை அகற்ற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT