Published : 06 Mar 2023 06:00 AM
Last Updated : 06 Mar 2023 06:00 AM

மின் இணைப்பு வழங்காமல் மின் கட்டணம் செலுத்த வந்த குறுஞ்செய்தி: திருப்பத்தூர் மாவட்டத்தில் சலசலப்பு

செந்தில்நாதனுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து வந்த மின்கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி.

திருப்பத்தூர்: விவசாய நிலத்துக்கு மின் இணைப்பே பெறாத விவசாயிக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த குறுச்செய்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்நாதன் (48). இவருக்கு சொந்தமாக 1.25 ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலத்தில் கடந்த ஆண்டு ஆழ்துளைக் கிணறு ஒன்றை செந்தில்நாதன் அமைத்தார். இந்த ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி விவசாய சாகு படிக்கு மின் இணைப்பு பெற அவர் கடந்தாண்டு விண்ணப் பித்திருந்தார்.

இந்த விண்ணப்பம் மீது நட வடிக்கை எடுக்காத தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாயி செந்தில்நாதனை பலமுறை அலைக்கழித்தனர். கடந்தாண்டு இறுதி வரை மின் இணைப்பு பெற செந்தில்

நாதன் பல கட்ட முயற்சிகளை எடுத்தும், அந்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்காமல் போனது. இருந்தாலும், மின் இணைப்பை பெற செந்தில்நாதன் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், வாணியம்பாடி கோட்டாட்சியர் அலுவலகம், மின் வாரிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் என பலரிடம் கோரிக்கை மனு அளித் தும், அவர் மனு மீது அரசு அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

மின் இணைப்பு பெறும் முயற்சியை கைவிடாத செந்தில்நாதன் தனது முயற்சியை தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது செல்போன் எண்ணுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாய நிலத்தில் மின் கம்பங்கள் நடவில்லை, மின்சார கம்பிகளும் விவசாய நிலத்தின் வழியாக செல்லவில்லை என்பதால் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக ஏற்கெனவே கூறி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம், வழங்கப்படாத மின்இணைப்புக்கு மின்சார கட்டணமாக ரூ.840 -ஐ மார்ச் 16-ம் தேதிக்குள் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என வந்த குறுஞ்செய்தியை கண்டு விவ சாயி செந்தில்நாதன் அதிர்ச் சிக்குள்ளானார்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டபோது, அதற்கான பதிலை மின்சார வாரியம் தெரிவிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து செந்தில்நாதன் கூறும்போது, ‘‘கடந்த ஓராண்டுக்கு முன்பு மின் இணைப்பு கேட்டு தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு விண்ணப்பம் அளித்தேன். எனது விண்ணப்பத்தின் மீது மின்சார வாரிய அதிகாரிகள் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், வழங்கப்படாத மின் இணைப்புக்கு மின்கட்டணம் ரூ.840 என்றும், அதை வரும் 16-ம் தேதி கட்ட வேண்டும் என வந்த குறுஞ்செய்தி என்னை மட்டும் அல்ல பெரும்பாலான விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளா கியுள்ளது’’ என்றார்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘மின் இணைப்பு பெறாமல் மின் கட்டணம் செலுத்து மாறு வெளியான குறுஞ்செய்தி குறித்து ஆய்வு நடத்தி வரு கிறோம். கணினி குளறுபடியா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில், இதற்கான விடை தெரியவரும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x