

வேலூர்: வேலூர் ஓட்டேரி ஏரியில் மர்ம மான முறையில் மீன்கள் நேற்று இறந்து மிதந்தன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அருகாமையில் வசித்து வரும் மக்கள் ஏரி அருகே சென்று பார்த்த போது, அங்கு ஏரியில் நீரில் கொத்துக்கொத்தாக மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இந்த தகவலை வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் தற்போது குறைந்த அளவில் தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கடந் தாண்டு பெய்த பருவ மழையின் போது ஏரி நிரம்பாமல் இருந்தது. இதையடுத்து, ஏரியில் தேங்கிய சிறிதளவு தண்ணீரில் ஏராளமான மீன்கள் இருந்தன.
இந்நிலையில், ஏரியின் கரை யோரத்தில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம் அருகே தண்ணீரில் நேற்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநகராட்சி அதிகாரிகள் ஏரியின் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் இறக்க காரணம் என்ன என்பது குறித்து முழு விசாரணைக்கு பிறகு தெரியவரும் எனக்கூறினர்.