Published : 05 Mar 2023 08:48 PM
Last Updated : 05 Mar 2023 08:48 PM

வெளி மாநில தொழிலாளர் விவகாரம் | தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது: பீகார் அதிகாரிகள் குழு

திருப்பூர்: வெளிமாநில தொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக திருப்பூர் ஆய்வுக்குப் பின் பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் பகிரப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மு.க. ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை செயலர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று(மார்ச் 5) திருப்பூருக்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டது. மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய், திருப்பூர் பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் இக்குழு நேரில் கலந்துரையாடிது. அதோடு, திருப்பூரில் உள்ள பிகார் மாநில தொழிலாளர்களர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன், ''வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியுள்ளது'' என தெரிவித்தார்.

பிகார் அதிகாரிகள் குழுவின் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய், ''போலி செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகே, இந்த விவகாரத்தின் முழு பின்னணி தெரியவரும். இப்போதே இது குறித்து கூற முடியாது. திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் 1.7 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுவரை 30 ஆயிரம் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்'' என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத், ''திருப்பூர் வந்த பீகார் மாநில அதிகாரிகள் குழு, திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தினார்கள். அவர்களுக்கு உண்மைநிலையை நாங்கள் எடுத்துக்கூறினோம். ஊடகங்களில் போலி செய்திகள் வருவதை இதற்கு முன்பும் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் பதற்றமடையவோ, அச்சமடையவோ தேவையில்லை. அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்துள்ளோம். வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையத்திற்கு அதிக அளவில் வந்த தொலைக்காட்சி செய்தியை தவறாக வெளியிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உண்மையில் அவர்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் நோக்கிலேயே தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x