Last Updated : 05 Mar, 2023 06:18 PM

1  

Published : 05 Mar 2023 06:18 PM
Last Updated : 05 Mar 2023 06:18 PM

கோவை வெள்ளியங்கிரி மலையில் 12 மணி நேரம் எரிந்த காட்டுத்தீ - பக்தர்களுக்கு வனத்துறை வேண்டுகோள்

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ.

கோவை: கோவை வெள்ளியங்கிரி மீலை மீது ஏறுபவர்கள் இயற்கைச் சூழலை பாதுகாக்க பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை வெள்ளியங்கிரி மலை மீது ஏறுவதற்கு ஆண்டுதோறும் கோவை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்த மலையில் ஏறுவதற்கு பிப்ரவரி மாதம் கடைசி முதல் மே மாதம் வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். அவ்வாறு ஏறுவதற்கு முன்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை கொண்டுவருகிறார்களா என வனத்துறையினர் சோதனையிட்டு அனுப்புகின்றனர். இருப்பினும், சோதனையிட ஆட்கள் பற்றாக்குறை, அதிகப்படியான கூட்டம் போன்ற காரணங்களால் மலையேறுவோரை முழுமையாக சோதனையிட்டு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

இதனால், பலர் பிளாஸ்டிக் கவர்களில் திண்பண்டங்கள், பீடி, சிகரெட், தீபெட்டி போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (பிப்.4) மாலை யாரோ ஒருவர் சிகரெட் பற்றவைத்து தூக்கி எறிந்ததால் நான்காவது மலையில் காட்டு தீ ஏற்பட்டது. வனத்துறையிருக்கு தகவல் கிடைத்தவுடன் 30 வனப்பணியாளர்கள், தீ தடுப்பு காவலர்கள், பழங்குடியின மக்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய எரிந்த தீயால் சுமார் 3 ஹெக்டேர் வனப்பரப்பு நாசமானது. நேற்று மாலை 4 மணிக்கு பரவிய காட்டு தீ 12 மணி நேர போராட்டத்துக்கு பின் இன்று (மார்ச் 5) அதிகாலை 4 மணியளவில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “காட்டுத் தீ ஏற்பட்டதால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. வார இறுதி நாள் என்பதால் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அடிவாரத்திலேயே காத்திருந்தனர். தீ அணைக்கப்பட்டபிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்புகின்றனர். அதையும் தாண்டி பலர் தீபெட்டி, பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை எடுத்துச்செல்கின்றனர். எனவே, மலையேறுவோர் இயற்கை சுழலை பாதுகாக்க பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x