

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி உடனடியாக கூட்ட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர், "புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது போன்று சமையல் எரிவாயுவுக்கு மானிய உதவியை அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். சமையல் எரிவாயு பயன்படுத்தும் தகுதியான அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.500 சிலிண்டர் மானியமாக அறிவிக்க வேண்டும்.
நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி கூட்ட வேண்டும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்ததில் இருந்து இக்கூட்டம் கூட்டப்படாததால் வாக்களித்த மக்களுக்கு தேர்தல் கால மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தர பட்ஜெட்டில் உரிய வழிவகை கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வடமாநில தொழிலாளர்களின் பிரதிநிதிகளை தொழிலாளர் துறை செயலாளர் அழைத்து பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார்.