Published : 12 Sep 2017 11:34 AM
Last Updated : 12 Sep 2017 11:34 AM

முல்லை பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு கேரள போலீஸார் 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்போது அம்மாநில அரசியல் கட்சியினர் அணைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

இதனால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தக் கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று தேசிய பாதுகாப்பு படை கேப்டன் அனுப்சிங் கவுலாம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் தேக்கடி படகுத்துறை வழியாக முல்லை பெரியாறு அணைக்கு சென்றனர். தனித்தனி படகுகளில் மத்திய துணைக்குழுவின் தமிழக பிரதிநிதியும், பெரியாறு - வைகை வடிநில வட்ட செயற்பொறியாளருமான டி.சுப்பிரமணியன் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறையினரும், கேரள நீர்பாசனத்துறை செயற்பொறியாளரும், மத்திய துணைக்குழுவின் கேரள பிரதிநிதியுமான ஜார்ஜ்டேனியில் தலைமையில் அம்மாநில அதிகாரிகளும் சென்றனர்.

தேசிய பாதுகாப்பு படையினர், பெரியாறு அணையை பார்வையிட்டதோடு, அதன் மதகுகள் மற்றும் பேபி அணையை ஆய்வு செய்தனர். பின்னர் அணைப் பகுதியில் உள்ள கேரள காவல்நிலையத்தையும் பார்வையிட்டு பாதுகாப்பு பணி குறித்து உடன் வந்திருந்த இடுக்கி மாவட்ட எஸ்.பி வேணுகோபாலிடம் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பெரியாறு, வைகை வடிநில வட்ட செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியன் கூறியதாவது:

2 மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸாரின் செயல்பாடு குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் கேட்டறிந்தனர்.

இது தொடர்பான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் அளிக்க உள்ளனர். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என்றார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகுமீண்டும் ஆய்வு

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கமாண்டர் மோகன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு படையினர் 4 பேர் அணைக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்போது, உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி, தேக்கடி படகுத்துறையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், தேசிய பாதுகாப்பு படையினரையும் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், உரிய அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர் வந்து ஆய்வுப் பணியை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்துள்ளனர். இம்முறை முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு தேசிய பாதுகாப்பு படையினர் அணையின் ஆய்வுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x