

மதுரை: திருச்சியைச் சேர்ந்த யோகமலர், சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் 2020-ல் உயிரிழந்ததால், மகன் வினோத்கண்ணா, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வினோத்கண்ணாவுக்கு சொந்த வீடு மற்றும் நிலங்கள் உள்ளன. அவர் தாயாரைச் சார்ந்திருக்கவில்லை என்று மகாலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது. அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, கருணை அடிப்படையிலான பணிநியமனம் பெற முடியும். கருணை அடிப்படையிலான பணியை, யாரும் உரிமையாகக் கோர முடியாது. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.