

அரூர்: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி வாச்சாத்தி கிராமத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்கு தொடுத்த அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான பி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது; வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி, வாச்சாத்தி கிராமத்துக்கு நேற்று வருகை தந்தார். ஏற்கெனவே தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதித்து வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் நிலத்தை பழங்குடியினர் அல்லாதவர்கள் வாங்க தடை விதிக்க வேண்டும். பழங்குடியினரின் நிலத்தை வாங்குவதால் அவர்களது ஆதிக்கம் ஓங்கியுள்ளது.
இதனால் பழங்குடியினரின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழங்குடியினரின் நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டெல்லி பாபு உடனிருந்தார்.