கூட்டணியை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நூற்றாண்டு மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, காதர் மொய்தீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நூற்றாண்டு மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, காதர் மொய்தீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை: எந்தக் காரணத்தை வைத்தும் எங்கள் கூட்டணியை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில்நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ப.மாணிக்கம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நூற்றாண்டு மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்ல கண்ணு வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: உலகில் மிகச் சிறந்த மனிதர்களை மாணிக்கம் என்பார்கள். அந்த வகையில் பிறக்கும்போதே மாணிக்கமாக பிறந்தவர்தான் கம்யூனிஸ்ட் தலைவர் ப.மாணிக்கம். அவரது தந்தை பக்கிரிசாமி சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாணிக்கத்துக்கும் எங்களுக்கும் பூர்வகால தொடர்பு உள்ளது.

கொள்கை யுத்தம்: பொதுவுடமை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்குமான நட்பு கொள்கை பூர்வமானது. அந்த நட்பின் தொடர்ச்சியாக ஒரே அணியாக செயல்படுகிறோம். இப்போதுபோல எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அடுத்து நாடாளுமன்ற தேர்தல் களம் காத்திருக்கிறது.

நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, நாடு முழுவதும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். மதவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும். இதைத்தான் எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கூறினேன். தமிழகம் போன்று அனைத்து மாநிலங்களிலும் ஒற்றுமை இருந்தால்தான் வெற்றி பெற முடியும். 2024 தேர்தல் என்பது கொள்கை யுத்தம்.

இளைஞர்களுக்கு பயிற்சி: அதற்கு வியூகம் வகுப்பது ஒரு பக்கம் என்றால், படைகளை உருவாக்குவது இன்னொரு பக்கம். இயக்கங்களை நோக்கி வரும் இளைஞர்களுக்கு கொள்கை பயிற்சி அளிக்க வேண்டும். காரல் மார்க்ஸின் கொள்கைகள் பிளவுபடுத்தும் கொள்கை என கூறுவோருக்கு பதிலளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

அவரது கருத்துகளை நாடு முழுவதும் விதைக்கும் பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களுக்கு இருக்கிறது. பிஹார் மாநிலத்தில் இருந்து வந்து தொழில் செய்வோரை பயன்படுத்தி அரசியல் லாபம் பார்க்க நினைக்கின்றனர். எந்தக் காரணத்தை வைத்தும் எங்கள் கூட்டணியை ஒரு போதும் பிளவுபடுத்த முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

சட்டம் – ஒழுங்கை கெடுக்கும் சூழலில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளர் ஆ.மு.சலீம், கே.சுப்பராயன் எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in