Published : 05 Mar 2023 04:05 AM
Last Updated : 05 Mar 2023 04:05 AM

சென்னையில் 1000 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க முடிவு

சென்னை: சென்னையில் 1,000 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 வழித்தடத்தில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நாள் தோறும் பேருந்து சேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை நீடித்த நகர்ப்புற சேவை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 தனியார் பேருந்துகளை குறிப்பிட்ட வழித் தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

தொடர்ந்து 2025-ம் ஆண்டு 500 பேருந்துகள் என 1000 பேருந்துகளை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையை வழங்கவே ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இது உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் தங்களின் பேருந்துகளை சென்னைக்குள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு ஒரு கி.மீ வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வரும் போது அதனை மாநகர போக்குவரத்து கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகர போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கு சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் மட்டுமின்றி திமுகவின் தொமுசவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x