Published : 04 Mar 2023 06:51 PM
Last Updated : 04 Mar 2023 06:51 PM
சென்னை: "நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் தடையின்றி தொடர சிபிசிஎல் நிறுவனம் உடனடியாக ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து உடைந்த பைப் லைனை சரிசெய்ய வேண்டும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்ட மீனவர்கள் தற்பொழுது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். காரணம் கடலில் கச்சா எண்ணைய் கசிவு விவகாரம். கடல், மீனவர்களின் வாழ்வாதாரம். அந்தக் கடலில், சிபிசிஎல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருக்கும் கச்சா எண்ணெய்யை கப்பலுக்கு கொண்டு செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கலந்து மிகுந்த பாதிப்பு எற்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியில் துர்நாற்றமும், கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் தடையின்றி தொடர சிபிசிஎல் நிறுவனம் உடனடியாக ஒரு காலக்கெடுவுக்குள் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து உடைந்த பைப் லைனை சரிசெய்ய வேண்டும். மேலும் நவீன இயந்திரங்கள் மூலம் கடலில் கசிந்த கச்சா எண்ணெய்யை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்தி மீனவர்களின் துயர் துடைத்து, அவர்களுக்கு உரிய நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT