Published : 04 Mar 2023 03:23 PM
Last Updated : 04 Mar 2023 03:23 PM

போலி கெளரவ டாக்டர் பட்டம் வழக்கு: விழா ஏற்பாட்டு அமைப்பு இயக்குநரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குநர் ராஜு ஹரிஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கவுரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், "படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறேன். அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை. அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை. என் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ம் தேதி என்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான, அரசு வழக்கறிஞர் செல்வம், "அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிட்டார். காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x