

சென்னை: நடிகர் வடிவேலு உட்பட 40 பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் அமைப்பு இயக்குநர் தலைமறைவாக உள்ளார். அவர் இதேபோல் ஏற்கெனவே 3 முறை பட்டங்களை வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் கடந்த மாதம் 26-ம் தேதி சினிமா உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் செய்திருந்தார்.
இசை அமைப்பாளர் தேவா, நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி - சுதாகர் உடபட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலு விழாவுக்குச் செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீடு தேடிச் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்பட வேண்டிய கவுரவ டாக்டர் பட்டங்கள், தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் சார்பிலும் போலீஸில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் ஹரிஷ் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த ஹரிஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஹரிஷ் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிஷ் கும்பகோணத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். கடைசியாக கே.கே. நகரில் வசித்துள்ளார். சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பை நிறுவி அதன் மூலம் பிரபலமாக முயன்றுள்ளார்.
இதற்காக ஆடம்பர நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வேறு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சந்தேகிக்கிறோம். இதேபோல் இவர் 3 முறை போலி டாக்டர் பட்டங்களை வெவ்வேறு இடங்களில் வைத்து பல்வேறு நபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்த பட்டங்களைப் பெற்றவர்கள் யார்? எங்கு வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என விசாரித்து வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்தினால் அண்ணா பல்கலைக்கழகமே பட்டங்களை வழங்கியதாகப் பொருள்படும் என்பதற்காகக் கடந்தாண்டு நவம்பர் மாதம் நிகழ்ச்சி நடத்த அண்ணா பல்கலை.யை நாடியுள்ளார். ஆனால், ஹரிஷின் கோரிக்கை அப்போது நிராகரிக்கப்பட்டது.
அதன் பிறகுதான் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பரிந்துரை கடிதம் கொடுத்ததுபோல் போலி கடிதத்தைத் தயார் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்துள்ளார். ஓய்வு நீதிபதியே கோரிக்கை விடுத்ததால் அண்ணா பல்கலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யில் விழா நடத்த அனுமதி கிடைத்ததால், நிகழ்ச்சி சரியானதாக இருக்கும் என ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் விருதுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இறுதியில் விருது நிகழ்ச்சியில் டாக்டர் பட்டத்தையும் வழங்கும் வகையில் ஹரிஷ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியே வழங்குவதால், டாக்டர் பட்டம் பெறப் பிரபலங்களும் இசைவு தெரிவித்துள்ளனர். இப்படி, பல தரப்பையும் ஏமாற்றி ஹரிஷ்மோசடிசெய்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம் என்றனர்.
இதற்கிடையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிஷ் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், ``இது அண்ணா பல்கலை. நடத்திய நிகழ்ச்சி அல்ல. அங்கு வைத்து நாங்கள் நடத்திய நிகழ்ச்சியே. கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது. இதற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. இந்த பிரச்சினையைச் சட்ட ரீதியில் எதிர்கொள்ள உள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.