இந்திய - இலங்கை பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு திருவிழா தொடங்கியது

கச்சத்தீவில் நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சி.
கச்சத்தீவில் நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சி.
Updated on
1 min read

ராமேசுவரம்: இந்திய-இலங்கை நாட்டு பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன் மாலை 4 மணியளவில் ஆலயத்தின் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப் தாஸ் ஜெபரத்தினம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வந்த சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது. இந்த நிகழ்வுகளில் இரு நாடுகளிலிருந்தும் வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்திய பக்தர்கள் 2,408 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்தே பக்தர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்தனர்.

பக்தர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டையும், மீன்வள துறை சார்பாக கடல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உயிர் காக்கும் கவச உடைகள் (‘லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டன.

நேற்று காலை 7 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கச்சத்தீவு செல்லும் பக்தர்களின் படகுகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக கடலோரக் காவல்படை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்று காலை (மார்ச் 4) சிறப்புத் திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா முடிவடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in