Published : 04 Mar 2023 06:20 AM
Last Updated : 04 Mar 2023 06:20 AM
கோவை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளால் தொழில்துறை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜவுளித் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில், வார்ப்பட தொழில் நிறுவனங்கள், கட்டுமானத்துறை, மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வட மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் தங்கி பணியாற்றிவரும் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பல மாதங்களுக்கு பின் ஜவுளித்தொழில் தற்போது தான் நெருக்கடியில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற வதந்திகள் தொழில்நிறுவனங்களில் உற்பத்தியை பாதிப்படைய செய்துள்ளன.
தமிழக டிஜிபி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இன்று சென்னையில் தமிழக முதல்வரின் செயலர் மற்றும் தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவு பஞ்சு நூற்பாலைகளில் கணிசமான அளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுபோன்ற வதந்திகள் தொழிலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து வெளியேறி வருவதாகவும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும்.
பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்கள் தீர்ப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட ‘புலம்பெயர் தொழிலாளர்கள் குறை களைவு குழு’ அமைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பிற மாநில தொழிலாளர்கள் பணியிடங்களில் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின், உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை பிரிவை 1077 என்ற கட்டணமில்லாத எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422-2300970, 9498181213, 8190000100, 9443808277 என்ற எண்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 9498181212, 7708100100 என்ற எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT