பணத்தை திரும்ப பெற்றுத் தர கோரி ஹிஜாவு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

பணத்தை திரும்ப பெற்றுத் தர கோரி ஹிஜாவு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: ஹிஜாவு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், அந்நிறுவனத்துக்கு எதிராக நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், அந்த தொழிலில் கிடைக்கும் வருமானம் மூலம் தமிழகத்தில் பிற தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்தது. இந்நிறுவனத்துக்கு 5 கிளை நிறுவனங்களும் இருந்தன.

இந்த வாக்குறுதிகளை நம்பி ஹிஜாவு மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.800 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி வட்டி கொடுக்கவில்லை. கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அந்நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஹிஜாவு நிறுவன இயக்குநர்கள், நிர்வாகிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்நிறுவன தலைவர் சவுந்தரராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையே, இந்நிறுவன நிர்வாகிகளில் ஒருவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நேரு (47) கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பல மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேர், ஹிஜாவு நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் எனக் கூறி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் அருகே நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது, ‘‘ஹிஜாவு நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த சுமார் 30 பேர் வரை கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பணத்தை விரைவில் மீட்டுத் தரவில்லை என்றால் தாங்களும் அந்த முடிவுக்கு போகக் கூடிய கட்டாயம் ஏற்படும்’’ என விரக்தியுடன் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in