Published : 04 Mar 2023 06:04 AM
Last Updated : 04 Mar 2023 06:04 AM

வேலூர் | அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட முதல் நிலை காவலருக்கு ரூ.10.15 லட்சம் நிதியுதவி

முதல் நிலை காவலர் தீர்த்தகிரிக்கு காவலர்கள் சார்பில் ரூ.10.15 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட முதல் நிலை காவலர் தீர்த்தகிரிக்கு 2011-ம் ஆண்டு பயிற்சிபெற்ற காவலர்கள் சார்பில் திரட்டப்பட்ட ரூ.10.15 லட்சம் நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி (36). இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 3-ம் தேதி ரேடியோ மையோபதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகும் அவரது இதயத்தின் வென்ட்ரிக்கல் மற்றும் ஆரிக்கல் பகுதியும் செயலிழந்து வருவது தெரியவந்தது. இதன்மூலம் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் இதய செயலிழிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என கூறப்பட்டது.

அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு implantable cardioverter defibrillator (ICD) என்ற கருவியை இதயத்தின் அருகே பொருத்த வேண்டியிருந்தது. இதற்கு, ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்பதால் அவர் பயிற்சி பெற்ற 2011-ம் ஆண்டைச் சேர்ந்த காவலர்கள் சார்பில் நிதி திரட்டும் பணி நடைபெற்றது.

இதில், வேலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 2011-ம் ஆண்டு காவலர்கள் சார்பில் ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 100 தொகை சேகரிக்கப்பட்டது. இதற்கான காசோலை மற்றும் பணமாக தீர்த்தகிரியிடம் நேற்று வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீர்த்தகிரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காசோலை மற்றும் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.

அப்போது, வேலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தனக்கு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல் நிலை காவலர் தீர்த்தகிரி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று அவருக்கு தரைதளத்தில் வீட்டை ஒதுக்கீடு செய்யுமாறு எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x