

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர், ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, அதிமுகவை உருவாக்கி, தான் உயிர் வாழும் வரை உழைத்து மாபெரும் இயக்கமாக மாற்றினார். வலுவோடு இருந்த கட்சி, இத்தகைய நிலைக்கு ஆளாகி இருப்பது வேதனை.
இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலம் முதல் ஒத்துழைத்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும், பன்னீர்செல்வத்தையும், கட்சி முன்னோடிகளையும் பழனிசாமி தரப்பினர் உதாசீனப்படுத்தினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்று, நாங்களும் உழைக்கிறோம் என்று கூறினோம். பன்னீர்செல்வத்தையோ, அவரை சார்ந்தவர்களையோ பிரச்சாரத்துக்கு கூட அழைக்கவில்லை.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் டெபாசிட்டையாவது பெற்றாரே என்பது ஆறுதல். இவ்வளவுக்கும் காரணம் தனிப்பட்ட நபர் பழனிசாமி.அவரும், அவரை சேர்ந்தவர்களும் கையாளும் விதம், ஆணவப்போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாத நிலை ஆகியவற்றின் காரணமாக தான் கட்சி இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடந்த தேர்தல்களில், அவரை முன்னிறுத்தியதால் தொடர் தோல்விகள் தான் ஏற்பட்டன. ஆட்சியை இழந்தோம். கட்சியையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோரை கட்சி தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தலில் எம்ஜிஆருக்கு இறுதி வரை வெற்றிமுகம். பழனிசாமிக்கு தொடக்கம் முதல் தோல்வி முகம்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்எஎல்ஏ ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.