கூடலூரில் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் கொட்டிய மெத்தனால் திரவம்: பெரும் ஆபத்து தவிர்ப்பு

பட விளக்கம்: கூடலூர் - கள்ளிக்கோட்டை சாலையில் டேங்கர் லாரிலிருந்து மெத்தனால் திரவம் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள்.
பட விளக்கம்: கூடலூர் - கள்ளிக்கோட்டை சாலையில் டேங்கர் லாரிலிருந்து மெத்தனால் திரவம் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள்.
Updated on
1 min read

கூடலூர்: கூடலூரில் கள்ளிக்கோட்டை சாலையில் டேங்கர் லாரியிலிருந்து மெத்தனால் திரவம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து மெத்தனால் திரவம் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. கூடலூரை அடுத்த பள்ளிப்பாடி பகுதி டேங்கர் லாரி வந்தபோது, எதிரே சென்ற லாரி பின்புறத்தில் உரசியதில் சிறிய ஓட்டை ஏற்பட்டு மெத்தனால் திரவம் சாலையில் கசியத் தொடங்கியது.

தீப்பிடிக்கக்கூடிய இந்த திரவம் சாலையில் கசிந்ததால் வாகன ஓட்டிகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சங்கர் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சென்று, டேங்கர் லாரியை ஓரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். சாலையில் கசிந்த மெத்தனால் திரவத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதையடுத்து, லாரியில் ஏற்பட்ட ஓட்டையை தற்காலிகமாக சரி செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மெத்தனால் திரவம் வேகமாக தீப்பிடிக்கக்கூடிய தன்மை கொண்டது என்பதால், பெரிய அளவிலான ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த நிகழ்வால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in