

திருச்சி: திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத் துறை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்கள் என்னும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் கு.அமல் முன்னிலை வகித்தார். திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் அ.குணசேகரன் கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டுப் பேசினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞான சைமன், சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழுத் தலைவர் ராஜேந்திரன் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தொடர்ந்து, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ‘வளன் தமிழ்’ விருதுகளை வழங்கி எம்.பி திருமாவளவன் பேசியதாவது: அயலகத் தமிழர்கள், தங்கள் வாழ்வில் சந்திக்கும் இன்பங்களையும், துன்பங்களையும் தங்களது எழுத்தில், இலக்கியங்களில் பதிவு செய்கிறார்கள். அந்தப் படைப்புகள் மேம்பட வேண்டும்.
அதை ஊக்கப்படுத்த தாய் மண்ணான தமிழ் மண் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. இது குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் இலக்கியங்கள் நமக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கும் அறத்தையே வழங்கியுள்ளன. இருப்பினும் சாதி, மதம், இனம் என பாகுபாடு காட்டும் மனிதர்கள் பலர் இங்கு உள்ளனர்.
இந்த பாகுபாடு என்பதுதான் மனிதகுலத்தில் உள்ள பெரும் தீங்காகும். எனவே, படைப்பாளர்கள் எதைப் படித்தாலும், அனைவரையும் சமமாக நடத்தும் மாண்பை படிக்காவிட்டால், அவர்கள் படித்த அனைத்தும் குப்பைக்கே செல்லும். எனவே, உங்கள் படைப்புகள் அனைத்தும் மனித குலத்துக்கு சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஊக்குவிப்பவையாக இருக்க வேண்டும்.
அதேபோல, மாணவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை உள்ள, அடுத்தடுத்த தலைமுறைகளை பற்றி சிந்திக்கும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் மக்களிடம் பரப்புகிற சிறந்த தலைவராக உருவாக வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என்றார். முன்னதாக கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் ஞா.பெஸ்கி வரவேற்றார். பேராசிரியர் சு.சீனிவாசன் நன்றி கூறினார்.
நல்லாட்சிக்கு கிடைத்த சான்று - முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: அகில இந்திய அளவில் பாஜவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி திமுகவின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்று என்றார்.