Published : 02 Mar 2023 08:26 PM
Last Updated : 02 Mar 2023 08:26 PM

“ஈரோடு கிழக்கு ஃபார்முலா... திமுக வென்றது ஜனநாயகத்தின் தோல்வி” - இபிஎஸ் அடுக்கிய காரணங்கள்

இபிஎஸ் | கோப்புப்படம்

சென்னை: "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி, அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் திமுக. திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி. தமிழ்நாட்டின் அரசியல் அறத்தின் தோல்வி. அறத்தையே அழித்தொழிக்கும் அரசியல் பிழைகளை நிகழ்த்தி இருக்கும் திமுகவின் நாட்கள் எண்ணப்படுகின்றன" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 27.2.2023 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட K.S.தென்னரசுக்கு, கட்சியின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும், கழகத்தின் சார்பில் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், தீய சக்திகளின் முகத் திரையைக் கிழிக்கின்ற வகையில் அதிமுக இந்தத் தேர்தல் களத்தை சந்தித்தது.திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில், திமுக ஆட்சி மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதே வகையான ஜனநாயகப் படுகொலையை ஈரோடு (கிழக்கு) தொகுதி இடைத் தேர்தல் களத்திலும் திமுக அரங்கேற்றியது.

திமுக ஆட்சியில், மின்கட்டண உயர்வால், சொத்து வரி உயர்வால், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களை தேர்தல் களத்தில் புறக்கணிப்பார்கள் என்பதை உணர்ந்த திமுக, கூட்டணிக் கட்சியிடம் தொகுதியைக் கொடுத்துவிட்டு மறைந்திருந்து வேலை செய்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த திமுக, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கத் தொடங்கியது.

`திருமங்கலம் பார்முலா’ என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, `ஈரோடு கிழக்கு ஃபார்முலா’ என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப் போல், வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது ஆளும் திமுக. எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். ``மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன்’’ என நான் எச்சரித்த பிறகு, பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக.

அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, உணவு, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. திமுக-வின் `மக்கள் அடைப்பு முகாம்கள்’ ஈரோடு (கிழக்கு) தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுகவினரால் மிரட்டப்பட்டார்கள்.

திமுகவினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. மக்களை அடைத்து வைத்திருந்த பகுதிகளுக்குள், நெஞ்சுரத்தோடு நுழைந்து உண்மையை உலகறியச் செய்த செய்தியாளர், திமுக அரம்பர்களால் தாக்கப்பட்ட காட்சிகளை நாட்டு மக்கள் பார்த்து பதைபதைத்தார்கள்.

``வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வாக்குக் கொள்ளை நடத்தல்’’ என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளிக் கொண்டுவந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜாதி, மத ரீதியாக மக்களைப் பிளந்து அதன்மூலமாக வாக்குகளைப் பெறும், வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தையே மூடி வைக்கும் அளவிற்கு சுமார் 30 அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) தொகுதியில் முகாமிட்டு இந்த ஜனநாயகப் படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள்.

திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இச்சூழ்நிலையில், ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டது ஆளும் திமுக.

திமுகவைச் சேர்ந்த வேறு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கு முந்தைய நாளிலும், தேர்தல் நாள் அன்றைக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியிலேயே வலம் வந்து பணம், பொருட்களை விநியோகித்தனர். தேர்தல் நாளில் நீங்கள் வாக்கு அளிக்கும் போது எந்த சின்னத்திற்கு வாக்களிக்கிறீர்கள் என்று நாங்கள் கேமராக்களில் பார்ப்போம்; நீங்கள் கை சின்னம் தவிர்த்து வேறு சின்னத்தில் வாக்களித்தால் கொடுத்த பணத்தை பிடுங்கிக் கொள்வதோடு, அரசின் நலத் திட்டங்களையும் தடை செய்வோம் என்று பாமர மக்களை மிரட்டிய காணொளிகள் வெளியாகின.

தேர்தல் நாளன்று வாக்குப் பதிவிலும் தொடர் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன. பல வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிக்க பொத்தானை அழுத்தியபொழுது, கை சின்னத்திற்கு நேரே இருக்கும் விளக்கு ஒளிர்ந்து வாக்குப் பதிவானது அதிர்ச்சி அளித்தது. இது பொதுமக்களால் புகாராக தெரிவிக்கப்பட்டும், ஊடகங்களால் சுட்டிக் காட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காளர் பட்டியலில் இருந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அந்தத் தொகுதியில் இல்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் வசிக்காத 40 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதே போல், இறந்த சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்த விபரங்களை அதிமுகவின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும் அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் நாளில் வாக்குப்பதிவு முடிய 1 மணி நேரம் இருந்த போது, 5 மணிக்கு திமுக குண்டர்கள் அதிமுக நிர்வாகிகளைத் தாக்கி ரகளை செய்யத் தொடங்கினர். இந்தக் காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகியது.திமுக ஏற்கெனவே திட்டமிட்டபடி, கடைசி ஒரு மணி நேரத்தில் அதிகமான வாக்குப் பதிவு செய்துள்ளது மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இது போன்ற எல்லா அராஜக அத்துமீறல்களையும் அரங்கேற்றி ஒரு அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி, அற்ப வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது ஆளும் திமுக.

திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி. தமிழ் நாட்டின் அரசியல் அறத்தின் தோல்வி.``அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்’’ என்கிறது தமிழ். அறத்தையே அழித்தொழிக்கும் அரசியல் பிழைகளை நிகழ்த்தி இருக்கும் திமுகவின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

இத்தனை அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் தாண்டி, திமுகவின் 22 மாத கால ஆட்சியின் அவலங்களை உணர்ந்து, ஆட்சியாளர்களின் போக்குக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில் அதிமுகவுக்கு வாக்களித்து, மாற்றத்திற்கு அச்சாரமிட்டிருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், பொய்ப் பிரச்சாரத்தால் குழம்பிப் போகாமல், திமுகவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அதிமுகவின் கரங்களை வலுப்படுத்தியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது பேரன்பையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல் களத்தில் தீய சக்திகளை வீழ்த்தும் சமரில், அதிமுகவோடு தோளோடு தோள் நின்று ஆதரவளித்து பணியாற்றிய பாஜக, தமாகா, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள், சங்கங்கள், பேரவைகள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலச் சூழலில், நம் கழகத்தின் மீது தொடுக்கப்பட்ட சூழ்ச்சிகளையும், எண்ணிலடங்கா தடைகளையும் தாண்டி, தீய சக்திகளின் முகத்திரையைக் கிழித்தெறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், எப்படி, எள்ளளவு சமரசத்திற்கும் இடமின்றி பணியாற்றி இருப்பார்களோ அதைப் போல, அவரால் உருவாக்கப்பட்ட நாமும் பணியாற்றினோம்.

தமிழ் நாட்டு மக்களைக் காக்கும் ஜனநாயக யுத்தத்தில் இரவு பகல் பாராமல், ஓய்வு உறக்கமின்றி, உள்ளத்து உறுதியோடு உழைத்திட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்றஉறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக ஈரோடு (கிழக்கு) தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகம் காக்கும் இந்தப் போராட்டத்தை பதிவு செய்யும் வரலாற்றுப் புத்தகங்கள், இந்தப் போராட்டத்தில் நீங்கள் கொடுத்திருக்கின்ற இந்த அரும் பெரும் உழைப்பை பெருமிதத்தோடு பதிவு செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த இடைத் தேர்தல் களத்தில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு பேருதவியாக இருந்த கலைத் துறையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர்களுக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கும், நெஞ்சுரத்தோடு பணியாற்றிய ஊடகத் துறை நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அராஜகங்களும், பாசிச நடைமுறைகளும் என்றென்றும் வெற்றி பெற்றுக்கொண்டேஇருக்காது. விரைவில் வீழும். மக்கள் நலன் காக்கும் ஜனநாயகப் போர்க் களத்தில், தொடர்ந்து உழைப்பைக் கொடுத்து எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கான மனஉறுதியை, மக்களின் வாக்குகள் நமக்கு கொடுத்திருக்கின்றன.

ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது; விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுகவினரின் முகத்திரையைக் கிழித்து,மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வதற்கு,ஓய்வில்லாமல் தொடர்ந்து களப் பணி ஆற்றிட கட்சி நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வீர சபதமேற்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x