Published : 02 Mar 2023 07:26 PM
Last Updated : 02 Mar 2023 07:26 PM

மதுரைக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 60 டன் வெண்ணெய்: தனியார் நெய் விற்பனைக்கு ஆவின் துணையா?

மதுரை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆவின் ‘நெய்’க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், மக்கள் தனியார் நெய் வாங்க செல்வதால் ஆவின் நிர்வாகம் மறைமுகமாக தனியார் நெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு துணை போகிறதா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதில், மதுரை ஆவின் நிறுவனம் மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. பால் கொள்முதல் குறைந்துள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே ஆவின் பால் பற்றாக்குறை நீடிக்கிறது. ஆவின் பாலை தொடர்ந்து வெண்ணெய் பற்றாக்குறையால் தற்போது மதுரை ஆவின் உற்பத்தி நிலையத்தில் ஆவின் நெய் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 939 ஆவின் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு ஆவின் பால் தட்டுப்பாடுடன் கிடைக்கும் நிலையில் ஆவின் நெய் விற்பனைக்கு வருவதில்லை. அதேநேரத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆவின் நெய் கிடைக்கிறது. ஆவின் நெய்யை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் நெய் வருவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும் என விற்பனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மக்கள் ஆவின் நெய் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இந்த மாதம் ஆவின் நெய்க்கு பதில் மற்ற தனியார் பால் நிறுவன நெய்களை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், ஆவின் பாலை தொடர்ந்து வெண்ணெய் போன்றவையும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை ஆவின் அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு வெண்ணெய் கொள்முதலை தொடங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தாமதமாக வெண்ணெய் கொள்முதல் செய்வதால் ஆவின் நெய் உற்பத்தியும் முடங்கிப்போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்களிடம் வரவேற்பு: ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூ.630 விற்கிறது. மற்ற தனியார் நிறுவன நெய் ஆவின் நெய்யை விட கூடுதலாக விற்பனை ஆகிறது. மேலும், ஆவின் பால், நெய் போன்றவை தனியார் பால் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை காட்டிலும் தரத்தில் உயர்ந்ததாக உள்ளது. அதனால், பொதுமக்கள் ஆவின் பால், நெய்யை விரும்பி வாங்கி செல்வதால் சந்தையில் ஆவின் பொருட்களுக்கு நிரந்தரமாகவே நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது தமிழகத்தில் மட்டுமில்லாது வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. அதனால், வெண்ணெய் வரத்து இல்லாமல் மதுரை ஆவினில் நெய் தயாரிப்பு முடங்கிப்போய் உள்ளது.

இதுகுறித்து மதுரை ஆவின் நிர்வாக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது பால் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டதால் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதேநேரத்தில் பற்றாக்குறை நிலவுவது வாடிக்கைதான். அதுபோல், நெய் தயாரிப்புக்கான வெண்ணெய் தற்போது 60 டன் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளோம். அந்த வெண்ணெய் தற்போது மதுரைக்கு வந்துவிட்டது. ஒரிரு நாளில் நெய் தயாரிப்பு தொடங்கி மீண்டும் முன்போல் நெய் விற்பனை ஆவினில் தொடங்கிவிடும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x