Published : 02 Mar 2023 06:43 PM
Last Updated : 02 Mar 2023 06:43 PM
சென்னை: "துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், சரியான நேரத்தில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின்படியே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், சரியான நேரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் தற்போது அரசின் வசம் உள்ளதை மாற்ற வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வது போல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிர்க்கட்சி தலைவரை உள்ளடக்கிய பரிந்துரைக் குழு தேவை: உச்ச நீதிமன்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT