

சென்னை: “இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்துவது போல சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை. உரிய ஆதாரங்களின்றி இதுபோன்ற கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழ்நாட்டில், தாக்குதல் நடத்துவது போல சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. உரிய ஆதாரங்களின்றி இதுபோன்ற பதிவுகள் பகிரப்படுகிறது. எனவே, இதை உண்மையென்று நம்பி யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம்.
சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் அந்த வீடியோ, உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சண்டை ஆகும். மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட வீடியோ. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான அமைதியான மாநிலம்.
சட்டம் - ஒழுங்கைத் திறம்பட உறுதி செய்து பொதுமக்களின் பாதுகாப்பு வழங்கி வருகிறது. எனவே, தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட் தவறானது. எனவே, இந்த தவறான தகவலை உண்மையென்று நம்பி இதைப் பகிரவேண்டாம். மீறி இதுபோன்ற பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளது.