சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: பொதுமக்கள் கவலை; அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: பொதுமக்கள் கவலை; அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

Published on

சென்னை: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.50-ம், வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ரூ.351-ம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.710-ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் ரூ.1,068.50-க்குவிற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.1,118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிக்கப்பட்டு, ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரித்திருப்பது பொதுமக்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால், ஓட்டல்கள், தேநீர்க் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன்: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மூன்று மாநிலங்களின் தேர்தல்கள் முடிந்த பிறகு, விலையை உயர்த்தி பொதுமக்களை பாஜக அரசு வஞ்சித்துள்ளது. இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கைவிடக் கோரி, எதிர்க்கட்சிகளை திரட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in