Published : 02 Mar 2023 06:59 AM
Last Updated : 02 Mar 2023 06:59 AM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மெரினா கடற்கரையில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்தினார். அப்போது, திக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கிருந்து கோபாலபுரம் இல்லம் சென்ற முதல்வர் ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றதுடன், கருணாநிதி படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிஐடி நகர் இல்லத்துக்குச் சென்று, ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி.யிடம் வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் வந்த முதல்வருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஆகியோர், பேனா, புத்தகம், சால்வை, பூங்கொத்து, பழக்கூடை உள்ளிட்டவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜாகிர்ஷா, ஒரு ஒட்டகத்தை பரிசாக வழங்கினார். வாழ்த்து கூற காத்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களின் வரிசை அண்ணா சாலை வரை நீண்டது. காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை உற்சாகத்துடன் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
தலைவர்கள் நேரில் வாழ்த்து: முன்னதாக, முதல்வரின் இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், டிவிஎஸ் குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன், திட்டக் குழு உறுப்பினர் மல்லிகா சீனிவாசன், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத் தலைவர் என்.கண்ணையா உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதேபோல, அண்ணா அறிவாலயத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ஜெயக்குமார் எம்.பி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி, மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிகுமார் எம்.பி. சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, ஆளூர் ஷாநவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்தியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர்கள் நாசர், விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுகளின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மரக்கன்று வழங்கிய முதல்வர்: வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்கள், தொண்டர்களுக்கு மஞ்சள் பையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர், ஒரு மரக்கன்றை நட்டு வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், ‘மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்ற கருணாநிதியின் சொல்படி, இந்த ஆண்டும் ஒரு மரக்கன்று நட்டு வைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்று, புத்தகங்களை பிறந்த நாள் பரிசாக கொண்டு வந்தவர்களுக்கு மஞ்சள் பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் சிறுமலர் பள்ளிக்கு சென்ற முதல்வர், மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ட்விட்டர் டிரெண்டிங்: உலகம் முழுவதும் உள்ள திமுக ஆதரவாளர்கள், கட்சியினர் ஆகியோர் ‘07127191333’ என்ற எண்ணில் அழைத்து, தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்யவும், www.selfiewithCM.com என்ற இணையதளத்தில் க்யூஆர் கோடு வடிவத்தை ஸ்கேன் செய்து, மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்திருந்தது.
இதில் ஏராளமானோர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்வருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தையும் ஊடகங்களில் பதிவேற்றினர். ட்விட்டர் மூலமாகவும் வாழ்த்துதெரிவித்தனர். இதனால் #HBDMKStalin70 என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டிரெண்டானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT