Published : 02 Mar 2023 06:23 AM
Last Updated : 02 Mar 2023 06:23 AM
சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமானம் மூலமாக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார்.
அவர் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்ததால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியினர் மாலை, சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
நேற்று மாலை திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் இல்லத்துக்குச் சென்ற கார்கே, அங்கு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், எங்கள் மாவட்டமான குல்பர்காவுக்கு வந்துள்ளார். அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ‘ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும். அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்’ என்றார். அது எப்போதும் எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில், எம்.பி.க்கள் ஜெயக்குமார், செல்லகுமார், ஜோதிமணி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், கக்கனின் பேரன் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராஜீவ் நினைவிடத்தில்.. இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் செல்லும் கார்கே, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். முன்னதாக, நினைவிட நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலையைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT