Published : 02 Mar 2023 06:19 AM
Last Updated : 02 Mar 2023 06:19 AM
சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்: நாட்டுக்கு சேவையாற்ற மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தேசிய முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: முழு உடல் நலத்துடன் மக்களுக்குக் கடமையாற்ற பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன்.
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: முதல்வரும், சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: கேரளா-தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. உங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி அனைத்தும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி: உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி: தொடர் விமர்சனங்கள், காழ்ப்புணர்வுகளைக் கடந்து, தனது ஓய்வறியாத உழைப்பால் வெற்றி பெற்றிருப்பவர் அண்ணன் ஸ்டாலின். கருணாநிதி சொன்னதுபோல, தனது அமைதியான உழைப்பு மூலம் திமுகவை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லும் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சிந்தனை, சொல், செயலில் திராவிட இயக்கக் கொள்கைகளைத் தாங்கி, அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் பணியாற்றும் தலைவர், முதல்வருக்கு வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, நல்லாட்சி வழங்க வாழ்த்துகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: நல்ல உடல் ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து: சிறு வயது முதலே அரசியலில் ஆர்வமுடைய முதல்வர், தனது உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர். அவரது தொலைநோக்குப் பார்வை, அயராத உழைப்பு, விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே.மணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தனர். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT