

ராமேசுவரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (மார்ச் 3) தொடங்குகிறது. இதில் இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள், 12 நாட்டுப் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கான அடையாள அட்டை இன்று (மார்ச் 2) வழங்கப்படுகிறது.
நாளை (மார்ச் 3) அதிகாலை 6 மணியிலிருந்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் சுங்கத் துறையின் சோதனைக்குப் பின்பு படகுகள் கச்சத்தீவுக்கு புறப்படும்.
அன்றைய தினமும், அதற்கு அடுத்த தினமும் (மார்ச் 4) பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பங்கேற்கும் கிறிஸ்தவர்கள் மார்ச் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் மீண்டும் ராமேசுவரம் வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பக்தர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கச்சத்தீவுக்கு வருவோர் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவோ, புகைப்பிடிக்கவோ, பாலிதீன் பைகளை கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.