Published : 02 Mar 2023 07:43 AM
Last Updated : 02 Mar 2023 07:43 AM
திருவாரூர்: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 2) தொடங்கி, டெல்லி வரை அனைத்து மாநில விவசாயிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படவுள்ள ‘கிஷான் யாத்ரா’ என்ற நெடும்பயணத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது.
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், டெல்லி விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிவக்குமார் காக்கா ஜி, பல்தேவ் சிங் சிரசா, ராஜேந்தர் சிங் கோல்டன், சுவாமி இந்தர், ராஜ் நீஷ் சர்மா உட்பட 9 வெளி மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் 20-க்கும் அதிகமான தமிழக பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் தொடங்கி கேரளம், தமிழகம், தெலங்கானா, ஒடிசா, பிஹார், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி முதல்வர்களைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்துவதுடன், குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தல், வேளாண் விளைப்பொருட்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை லாபகரமான- குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வருதல் உட்பட டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பயணத்தை கன்னியாகுமரியில் துரை வைகோ தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரையும், மார்ச் 3-ல் முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT