

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு மையம், காட்சி அரங்கம் உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மதிப்பீட்டு மையம் (Assessment Cell), ப்ரிவ்யூ தியேட்டர் (காட்சி அரங்கம்) ஆகியவை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘14417’ என்ற உதவி எண்ணுக்கான அழைப்புமையமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இவற்றை திறந்து வைத்தார்.
அப்போது, புதிய ப்ரிவ்யூ தியேட்டரில் முதல்வர் ஸ்டாலின் பேசிய காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், மாணவர்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் அம்சங்கள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
பின்னர், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டு பிரிவு புத்தக விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். துறை செயலர் காகர்லா உஷா,தயாநிதி மாறன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
‘இரு மொழிகளே போதும்’ - சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, ‘‘பேசியும், எழுதியுமே வளர்ந்த இயக்கம் திமுக.முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகியஇரு மொழிகளில் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன. நமக்கு இரு மொழிகள் இருந்தாலே போதும். 3-வது மொழியை கற்க வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அதை திணித்தால் எதிர்ப்போம்’’ என்றார்.
இதில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், புதுக்கல்லூரியின் முதல்வர் பஷீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.