

சென்னை: பெரும்பான்மைவாதம் என்னும் பேராபத்தில் இருந்து தமிழகத்தை காக்கும் அரண் முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: செங்கோல் வளையாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் எளிய மக்களை இனம்கண்டு ஆதரிப்பதை முதன்மையாகக் கொள்ள வேண்டும். அதைசிறப்பாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகளை, இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் செய்யவேண்டுமானால் 20 ஆண்டுகளாவது ஆகும்.
குறிப்பாக அவர் பல்வேறு மாநிலங்களில் செயல்படாமல் இருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கண்காணிப்புக் குழுவைஅமைத்து, அதனை காலமுறைப்படி கூட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தை அமைக்க வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை வைத்தவுடன், ஆணையம் அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியதோடு, ஆணையம் சிறப்பாக செயல்படும் வகையில் தகுதிவாய்ந்தவர்களை முதல்வர் நியமித்துள்ளார்.
கடந்த 2021 -ம் ஆண்டு வரைஎஸ்சி மாணவர்கள் உதவித் தொகை கிடைக்காமல் கல்வியை கைவிடுமாறு இருந்த நிலையில், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் உதவித் தொகை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிட மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான திட்டத்தில் பயன்பெற வருமான உச்ச வரம்புரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.8லட்சமாக முதல்வர் உயர்த்தியுள்ளார். அதனால் இப்போது எஸ்சி, எஸ்டி மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினால் நரிக்குறவர் சமூகம் புது வாழ்க்கையைப் பெற்றுள்ளது. அவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான தமிழக அரசின் முயற்சி காரணமாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அகதி முகாம்களின் பெயரை மறுவாழ்வு முகாம்கள் என மாற்றியதோடு அவர்கள் அனைவருக்கும்நிரந்தர வீடுகள் தர நடவடிக்கை எடுத்து சிறுபான்மையினரின் நோக்கிலிருந்து சமூகத்தைப் பார்த்து ஆட்சி செய்து வருகிறார். இவ்வாறுபெரும்பான்மைவாதம் என்னும் பேராபத்திலிருந்து தமிழகத்தைக் காக்கும் காப்பரணாகவும் திகழும் அவர் நீடூழி வாழ வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.