Published : 02 Mar 2023 04:03 AM
Last Updated : 02 Mar 2023 04:03 AM

மதுரை பனகல் சாலையில் நெரிசலை தீர்க்கும் பொறுப்பு யாருக்கு?

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பது யார் பொறுப்பு என்பது கேள்விக் குறியாகி உள்ள நிலையில், உள்ளூர் அமைச்சர்கள், அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை தொடர்கிறது.

இதனால், அன்றாடம் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மருத்துவ மனைக்கு எளிதாகச் சென்ற வர முடியாமல் பரிதவிக்கின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையில்தான் ஆட்சியர் அலு வலகம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, முக்கிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

பாண்டி கோயில் ‘ரிங்’ ரோடு, கே.கே.நகர், அண்ணா நகர் செல்லக் கூடியவர்கள் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

விதி மீறும் ஆட்டோக்கள்: அதனால், பனகல் சாலையில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஒரு புறம் இருக்க, ஆட்டோ ஓட்டுநர்கள் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதால் மருத்துவமனை முன் அடிக் கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல பல்வேறு விதிமுறைகளை காவல்துறை செயல்படுத்துகிறது. ஆனால், இந்தச் சாலையில் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் எந்த விதிமுறைகளையும் கடைப்பி டிப்பது இல்லை. அவர்களிடம் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. மருத்துவமனை நுழைவாயில் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.

அந்த இடத்திலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால், பின்னால் வரும் பேருந் துகள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிற வாகனங்களும் வரிசை கட்டி நிற்பதால் அந்த இடத்தில் செயற்கையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இதேபோல, மருத்துவமனை நுழைவுவாயில் முன்பும் ஆட்டோக் களை நிறுத்தி மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் நோயா ளிகள், பார்வையாளர்கள், உதவி யாளர்களைக் கையைப்பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் அமுக் காத குறைதான். இவ்வாறு ஆட்டோ ஓட்டுநர்களின் நட வடிக்கை தொடர்கிறது.

`எங்கள் பணி அல்ல': `இது மருத்துவமனை நுழைவு வாயில்' என காவலாளிகள் எவ் வளவோ எடுத்துக் கூறியும் ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த வார்த்தையைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. சுயநலமாகப் பயணிகளை ஏற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர்.

இதனால், சாலையின் இரு புறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்குள் செல்ல வேண்டியவர்கள், மருத்துவமனையில் இருந்து வெளியே வர வேண்டியவர்கள் மற்றும் சாலையின் இரு புறம் காத்திருக்கும் வாகன ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

இப்படி 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ஆட்டோ ஓட்டுநர்களால் காலை 8 முதல் மதியம் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவ மனைக்குள் ஒரு காவல்நிலையம் செயல்படுகிறது என்றாலும் நுழைவு வாயிலில் ஒரு போலீஸார்கூட போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முன்வருதில்லை. காரணம் `அது எங்கள் பணி அல்ல' என்று ஒதுங் கும் நிலைதான்.

பனகல் சாலையில் கடும் நெரிசல் ஏற்படும் போது மட்டும் போக்குவரத்து காவல் துறையினர் வந்து ஒழுங்குபடுத்த முயன்றாலும் அவர்களுக்கே ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குக் காட்டுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனை அருகே இரு பேருந்து நிறுத்தங்கள், கழிப்பறைகள், சுரங்கப்பாதை, நடைபாதைக் கடைகள் போன்றவற்றால் ஏற்கெனவே மருத்துவ மனை முன் செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக மருத்துவமனைக்கு வருவோர் தங்கள் வாகனங்களை இந்தச் சாலையில்தான் நிறுத்துகின்றனர். இந்தச் சாலை வழியாக அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் வரும்போது மாநகர காவல் துறை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அவர்களைப் பாதுகாப்பாக நெரிசல் இல்லாமல் அனுப்பி வைத்து விடுவதால் மருத்துவமனை முன் தினமும் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் படும் சிரமங்கள் அமைச்சர்களுக்கோ, உயர் அதிகாரிகளுக்குோ தெரிவதில்லை.

அரசுத் துறையே விதி மீறலாமா?: தற்போது புதிதாக ரூ.350 கோடி யில் இதேசாலையில் புதிதாக 7 மாடியில் கட்டும் மருத்துவப்பிரிவு கட்டிடத்துக்கும் வாகன நிறுத்தும் வசதி இல்லை. ஆனால், தனியார் நிறுவனம் வாகன நிறுத்தும் வசதியின்றி கட்டிடம் கட்டினால் உடனடியாக ‘சீல்’ வைத்து அபராதம் விதிக்கும் அரசுத் துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்குள்

ஆய்வு செய்து வாகனம் நிறுத் தும் வசதி செய்யாதது ஏன் என ஒரு கேள்விகூட கேட்கவில்லை. விதிமுறைகளை வகுக்கும் அரசாங்கமே ஒர் அரசுத் துறை விதிமீறலில் ஈடுபடும்போது கண்டு கொள்ளாமல் இருப்பது எப்படி என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வாகனம் நிறுத்தும் வசதி கட்டாயம் செய்ய வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் பலமுறை வலியுறுத்தியும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை.

கண்டுகொள்ளாத அரசுத் துறைகள்: மதுரை மாநகரில் மாநகர காவல்துறை, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசுத் துறைகளும் மருத்துவமனை சாலையில் உள்ள விதிமுறை மீறல்களையும் சரி செய்யவும், சாலையில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர்.

இந்த நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிதாக கட்டப்படும் கோரிப்பாளையம் மேம்பாலத்தில் இருந்து ஓர் இணைப்புப் பாலம், அரசு மருத்துவமனை வழியாக ஆட்சியர் அலுவலகச் சந்திப்பு வரை கட்டலாம். ஆனால், ஏதோ அரசுத் துறை அதிகாரிகள் மனதில் அந்த ‘திட்டம்’ இடம்பெறாமல் போனது புரியாத புதிராக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x