Published : 11 Sep 2017 10:12 AM
Last Updated : 11 Sep 2017 10:12 AM

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவையில் ‘நதிகளை மீட்போம்’ என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணியை தொடங்கினார். அதை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார். இந்த பிரச்சார பேரணி 30 நாட்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது.

இந்த விழிப்புணர்வு பேரணி நேற்று சென்னை வந்தது. அதைத் தொடர்ந்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜக்கி வாசுதேவ், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, சிஐஐ தலைவர் (தமிழ்நாடு) ரவிச்சந்திரன், நடிகை சுஹாசினி மணிரத்தினம், கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமான மரங்களை நடுவதன் மூலம் நதிகளைப் பாதுகாப்பதாகும். இதுபோன்ற பல்வேறு இயற்கையைப் பேணிக் காக்கும் நிகழ்வுகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். தமிழகத்தில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளத்தை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய முயற்சியாக ‘குடிமராமத்து’ முறைக்கு புத்துயிரூட்டி பங்கேற்பு அணுகுமுறையுடன் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடியில் 2,065 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள அணைகள், நீர்தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் படிவுகளை அகற்றி, அணைகளின் திட்டமிடப்பட்ட கொள்ளளவை மீட்டெடுக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. நிலத்தடி நீரை செறிவூட்டவும் ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லவும், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டுவதற்கு ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளன.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. கங்கை சீரமைப்புப் பணி போன்று தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை காலதாமதமின்றி தயாரிக்க வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்துக்கு துரிதமாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x