

சிவகங்கை: காரைக்குடி அருகே மின்சார வசதியின்றி 40 ஆண்டுகளாக 45 குடும்பங்கள் இரவில் இருட்டில் வசித்து வருகின்றனர்.
காரைக்குடி அருகே பாதரக்குடி ஊராட்சி மானகிரி சுக்கானேந்தல் பகுதியில் 50 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இவர்கள் கூலித்தொழிலாளிகளாக உள்ளனர். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதி வனமாக உள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம், வனத் துறை அனுமதியோடு சில குடும்பங்களுக்கு மட்டும் மின்சார வசதி ஏற்படுத்தித் தந்துள்ளது.
ஆனால் 45 குடும்பங்களுக்கு மின்சார வசதி இல்லை. இதனால் அவர்கள் வசிக்கும் பகுதி இரவில் இருட்டாக உள்ளது. ஹரிக்கேன், சிம்னி விளக்குகளே பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வசதி கேட்டு நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
இது குறித்து மானகிரி சுக்கா னேந்தல் பகுதி மக்கள் கூறியதாவது: மின்சார வசதி கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஏற்கெனவே சிலருக்கு மட்டும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா கூட தேவையில்லை. மின்வசதி கொடுத்தால் போதும்.
இப்பகுதியை நம்பியே எங்களது வாழ்வாதாரம் இருப்பதால், நாங்கள் வேறு பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டுள்ளன, என்று கூறினர்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் பாண்டிமீனாள் கூறியதாவது: மின்வாரிய அதிகாரிகள் வீட்டு வரி ரசீது கேட்கின்றனர். ஆனால் அவர்கள் குடியிருக்கும் பகுதி வனத்தில் வருவதால் வீட்டு வரி ரசீது கொடுக்க முடியவில்லை. மேலும் தங்களது அனுமதியின்றி வீட்டு வரி ரசீது வழங்கக் கூடாது என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் மின்சார இணைப்பு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது, என்று கூறினார்.