

கரூர்: கரூரில் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் 1,000 பேருக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்குகிறார்.
கரூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மாநில இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.
கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது: மார்ச் 4-ம் தேதி கரூருக்கு வரும் அமைச்சர் உதயநிதி, அன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கரூர் அரசு காலனியில் நடைபெறும் குதிரை ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, கரூர் கோடங்கிபட்டியில் நடைபெறும் முதல்வரின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி(பணமுடிப்பு) வழங்கி சிறப்புரையாற்றுகிறார் என்றார்.
கூட்டத்தில், மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கட்சியின் மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் மணிராஜ், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம், ஆர்.இளங்கோ, க.சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.