Published : 02 Mar 2023 04:07 AM
Last Updated : 02 Mar 2023 04:07 AM
புதுக்கோட்டை: கீரமங்கலத்தில் கோயில் வழிபாட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்குடம் எடுக்க தடை விதிக்கப்பட்டதால் ஒரு தரப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பட்டவையனார் கோயிலில் 5 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருதரப்பினரும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்க வேண்டும் என வருவாய்த் துறையினரும், போலீஸாரும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், கோயிலில் நேற்று பால்குடம் எடுத்து, அன்னதானம் செய்வதற்காக ஒரு தரப்பினர் ஆயத்தமாகினர். எங்களின் ஆலோசனையை ஏற்காமல் நடத்தப்படுவதால் இதைத் தடுக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு தரப்பினரையும் ஆஜராகுமாறு கோட்டாட்சியர் முருகேசன் அழைப்பு விடுத்தார்.
ஆனால், பால்குடம் எடுக்க ஆயத்தமாகிய தரப்பினர் ஆஜராகவில்லை. இதையடுத்து, கோயிலில் பால்குடம் எடுத்து, அன்னதானம் செய்ய வருவாய்த் துறையினர் தடை விதித்தனர். இதைக் கண்டித்து, பால்குடம் எடுக்க ஆயத்தமான தரப்பினர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேற்று அரிசி, காய்கனி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 30 பெண்கள் உட்பட 51 பேரை ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இந்த மறியலால் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT