Published : 05 Sep 2017 09:43 AM
Last Updated : 05 Sep 2017 09:43 AM

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவையில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையொட்டி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவையில் மாணவர்கள் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பில், நீட் தேர்வுக்கு எதிரான மாணவர், இளைஞர் கூட்டமைப்பினர் நேற்று மாலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி, காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். புரட்சிகர இளைஞர் கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 42 பேரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, அந்த வழியாகச் சென்ற செவிலியர் நவநீதா (32) என்பவர், நீட் தேர்வுக்கு எதிராகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும் பேட்டியளித்தார். அப்போது, அங்கிருந்த போலீஸார் பேட்டி கொடுக்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. கருத்து சுதந்திரத்தைத் தடுக்கக் கூடாது என்று அந்தப் பெண் போலீஸாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார், அவரை அங்கிருந்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவரை விடுவித்தனர்.

இதேபோல், எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அக்கட்சியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் வடகோவை ரயில் நிலையத்தில் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேர் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x