காற்றாலை மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கோவை: காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மாநில நிர்வாகிகள் மகேந்திரன், முத்துச்சாமி, கே.எம்.தண்டபாணி, முரா.செல்வராஜ், மீனா ஜெயக்குமார், துணைமேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் வீணடிக்கப்பட்ட நிலையில்,கடந்த ஆண்டு அந்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இனியும் முழுவதுமாக பயன்படுத்தப்படும்.
கோடை காலத்தில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவை என்பது குறித்து கணக்கிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர். இந்தப் பணிகள் இன்றுடன் (நேற்று) நிறைவு பெறுகிறது. உறுதியாக காலநீட்டிப்பு என்பது கிடையாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார். நான் கேட்பதற்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா. அவர் சொல்வதில்லை. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு முறை நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் மத்திய அரசுஅதற்கான நிதியை ஒதுக்கவில்லை. அதற்கு செவி சாய்க்கவும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
